Total Pageviews

Wednesday, February 2, 2011

அன்புள்ள அப்பா...

சின்னச்சிறு குழந்தையாய் கைகளில் தவழ்ந்தாய்
என்னை நீ தாங்கிடும் வயதும் வந்தது.

உன்னிடம் கேட்பதெல்லாம் அன்பும் அரவணைப்பும்
என்னிடம் இருப்பதெல்லாம் பரிவும் புன்சிரிப்பும்.

உரையாடல் நம்மிடையே ஊடகம்தானே
விரையாமல் உடன் அமர்ந்து மகிழ்விப்பாயா?

கைப்பிடித்து நடைபழக்கி உவகை கொண்டேனே
கைதாங்கி கனிவுடனே அமர வைப்பாயா?

மறக்காமல் மீண்டும் மீண்டும் கதை சொல்வேனே
வெறுக்கிறாய் இன்று சொன்னதையே சொல்வதாய்.

அன்று சுத்தமும் ஒழுக்கமும் உனக்கு நான் கற்பித்தேன்
இன்று கைநடுங்கி சிதறும் உணவால் சினம் கொள்ளாதே.

விரிந்து வரும் விஞ்ஞானம் மனதில் பதிவதில்லை
புரிந்துகொள்ள சற்றே அவகாசம் தருவாயா?

போதும் இந்த வாழ்க்கையென இறைவனை அழைத்திட்டால்
ஆதரவாய் நீபேசி என்மனம் தேற்றுவாயா?

முதுமையில் தனிமை ஒரு தீராத கொடுமை
அது என்னை வதைத்திடாமல் அணைத்திருப்பாயா?

என்றும் அன்புடன்
உன் அன்புள்ள அப்பா...

No comments:

Post a Comment